தமிழ் – முதன்மை மொழி

உலகில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமையான சொல்லாடலுக்கு உரித்தான ஒரே மொழி இப்புவியில் ” தமிழ் ” என்றால் அது மிகையல்ல.  அதனால் தான் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் நுழைவாயிலில் பெருங் கவிஞன் கனியன் பூங்குன்றனாரின் வரிகளான  ” யாதும் ஊரே யாவரும் கேளிர் “- பதிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து பகுதிகளையும், ஊர்களையும் தமதாகவே கருதி; உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதி, எவ்வித வேற்றுமையும் பாராமல் ஒரு இனத்தின் மொழி இருந்தது, இருக்கிறது, இருக்கப்போகிறது- என்றால் எத்தகைய பெருமைக்கு உரியது அம்மொழி ?

உலக மக்கள் அனைவரையும் மட்டும் தான் தமிழ் மொழி கருத்தில் கொண்டதா என்றால் இல்லை என்பதே பதில். கடந்த 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியலாளர் திரு.ஜே.ஆர்த்தர் ஹாரிஸ் என்பவர் Bio-diversity என்ற உலகின் பலவிதமான உயிரிகளைப் பற்றி முதன் முதலாக தனது படைப்பில் பயன்படுத்தி இருந்தாலும் ; கடந்த  1985-ல் திரு. வால்டர் ஜி.ரோசன் பயோடைவர்சிட்டி என்ற வார்த்தையை உருவாக்கி அதைப்பற்றி பேசியபோது உலக மக்களால் பெரிதும் உவந்து பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் செம்மாந்த தமிழ் மொழியிலோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் பல்லுயிர்களைப் பற்றியும்; அதனைப் பாதுகாப்பது பற்றியும்  கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்;

” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
            தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 

இதனையே ஆகச்சிறந்த அறமென்று தமிழ் மொழியில் கூறப்பட்டிருப்பதை இவ்வுலகம் இதுகாறும் கொண்டாடவில்லை என்பது பெரும் சோகமேயன்றி வேறில்லை.

பொதுவாக  “புரட்சி “- என்ற வார்த்தையை பிரான்சு நாட்டோடு தொடர்பு படுத்துவது என்பது பெரும்பாலான எழுத்தாளர்களிடம் காணப்படும் ஓர் அம்சமாகும்.  உண்மை என்னவெனில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே நமது “சித்தர்கள்” தமிழில் எழுதிய பாடல்கள் அனைத்திலும் புரட்சிகரமான கருத்துகள் மிகை எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அதற்கு இணையான புரட்சிகரமான சொல்லாடல்கள்,  கருத்துகள் அத்தகைய காலகட்டத்தில் உலகில் எந்த மூலையிலும் இல்லை என்பதே உண்மை.

தமிழில் கிடைக்கப்பெற்ற பழமையான நூல் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியம் ஆகும். இது தமிழ் மொழியின் இலக்கண நூலாகும். ஒரு மொழியானது முதலில் பேச்சு மொழியாக இருந்து, படிப்படியாக வரி வடிவத்திற்கு ( எழுத்து வடிவம் ) மாறி , பல காலம் கடந்த பிறகே இலக்கணம் மற்றும் இலக்கியமாக உருவெடுக்கும். தமிழ் மொழியில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே அம்மொழிக்கான இலக்கணம் நூலாக வடிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு எத்துனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து தமிழ் மொழியானது வழக்கத்தில் இருந்திருக்கும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூறிட முடியாது என்பது திண்ணம்.

அண்மையில் திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வுக்குறிப்பில் பூம்புகார் நகரை ஏறக்குறைய பதினையாயிரம் ஆண்டுகட்கு முன்பு கடல் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். அதாவது பதினையாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் மொழி வழக்கத்தில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படுகிறது . உலகில் எம்மொழியாவது இத்தகைய பழமை வாய்ந்ததாக இருக்க முடியுமா? மொழிஞாயிறு திருமிகு.தேவநேயப் பாவாணர் அவர்களின் கூற்றுப்படி உலகில் தற்போது வழக்கத்தில் உள்ள 2795க்கும் மேற்பட்ட மொழிகள் ஒன்பது குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.  இவை எதிலும் தமிழின் தொன்மைக்கு நிகரான மொழி என்பதே இல்லை என்பதே உண்மை. மேலும் தமிழ் மொழியில் காணப்படும் இலக்கண-இலக்கியச் செறிவும் வேறு மொழிக்கு உண்டா ? என்றால்  இல்லை என்பதே பதில்.

    இயல், இசை , நாடகம் – என தமிழ் முத்தமிழ் மொழியாக வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும். இதில் திருக்குறளானது உலகப்பொதுமறை என்ற சிறப்பினை உடைய நூலாகும். இது 45 மொழிகளில் பல்வேறு நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திய தேசத்தின் தேசியக்கவி திருமிகு. பாரதியார் அவர்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கசடறக் கற்றறிந்தவர்.  அவர் தமிழ் மொழியைப் பற்றி ;

யாமறிந்த மொழிகளிலே தமிழ்
மொழிபோல் இனிதாவது எங்கும்
                  காணோம்

என்று கூறுகிறார். மேலை நாட்டு அறிஞர் திருமிகு. ஜி.யூ.போப்- அவர்கள் ஒருபடி மேலே சென்று;

            ” எனது கல்லறையின் மேல் நான்
              ஒரு தமிழ் மாணவன் என்று எழுதுங்கள்
என்று கூறினார்.

உலகின் எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அறிவுசார் கருத்துகள் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக அணுவை ( ATOM) திருமிகு. ஜான் டால்டன் என்பவர் கடந்த 1803-ல் கண்டு பிடித்தார் என்பதே இதுகாறும் நம்பப்படுகின்ற அறிவியல் . ஆனால் சங்க காலத்தில் (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு)வாழ்ந்த பெண் புலவர் ஔவையார் அவர்களோ;

     “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
      குறுகத் தரித்த குறள்

என்று திருக்குறளைப் பற்றி பாடியுள்ளார்.  அதன் பொருளானது : பிரிக்கவே இயலாத அணுவைத் துளைத்து , அதனுள்ளே ஏழு கடல் அளவிளான கருத்தைப் புகுத்தி ஆகச்சிறியதாய் உள்ள திருக்குறள் என்பதாகும்.  “அணு “- என்பதைப் பற்றி அறியாமல் அணுப்பிளவைப் பற்றி ( ATOMIC FISSION) எங்கனம் பாடல் இயற்றிட முடியும்?

திருமந்திரத்தில்   சித்தர் பெருமகனார் திருமூலர்

அணுவில் அவனும் அவனுள் அணுவும்
          கணுஅற நின்ற கலப்பது உணரார்…”

என்று பாடுகிறார். அதில் ஒப்பில்லாத இறைவன் சிவபெருமான் அனைவருக்குள்ளும் அணு அளவில் நிறைந்துள்ளார் என்கிறார்.

இவ்வாறு தமிழ் மொழி வளமை நிறைந்த மொழியாக,  எவ்வித பிறமொழி படையெடுப்பிலும் அழித்திட இயலாத, உலகின் தொன்மையான பூர்வகுடி மக்கள் பேசும் மொழியாக இருப்பது இம்மண்ணில் பிறந்த நம் அனைவருக்கும் என்றென்றும் பெருமையே….

தமிழால் இணைவோம்….  என்றென்றும்…

சீ.கே. குமரன்
சென்னை.

Share:

C K KUMARAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.

Top
×