Arunachala Siva
ARUNACHALA THE HOLY HILL
GIRIVALAM
அண்ணாமலையானுக்கு அரோகரா
குழந்தை பருவத்தில் எனது பிறந்த ஊரான காரைக்குடியில் பெரும்பாலான பொழுதுகள், ஓட்டு வீட்டின் வெளியே வேடிக்கை பார்ப்பது தான்.
அப்பா எனது குழந்தை பருவ நினைவாக அடிக்கடி பகிர்ந்தது இதுவே..
மலையே இல்லாத ஊரில் எதையோ பார்த்து விட்டு, அப்பா இந்த தெருவின் முடிவில் ஒரு பெரிய மலை தெரிகிறது அங்கே கூட்டிச் செல்லுங்கள் என கேட்டதாக கூறி சிரிப்பார்….
அண்ணாமலையாரின் திருக்கார்த்ணிகை தீபத்தை ஒவ்வொரு வருடமும் பொதிகை தொலைகாட்சியில் நேரலை ஒளிபரப்பும் போது, அண்ணாமலையானுக்கு அரோகரா கோஷம் கேட்ட பின், அப்பா, இப்போது போய் வெளியே விளக்கு ஏற்றுங்கள் என்பார். அவ்வளவே அண்ணாமலையார் பற்றி தெரியும்….
பிரம்மாண்ட மலையான, அண்ணாமலையாரை காணும் வாய்ப்பு, கிரிவலம் செல்லும் வாய்ப்பு என்பதே எனது குருவான அண்ணாமலை ஐயா பால்பாண்டியன் அவர்கள் ஆசிகளுடன் தான் தொடக்கம்….
ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டு செய்வதற்கும், அப்படியே அருளிடம் ஒப்படைத்து செய்வதற்கும் ஆன வழியை தந்தவர் எங்கள் ஐயா 🙏🏼
எத்தனை கிலோமீட்டர் சுத்தணும்
என்னென்ன லிங்கங்கள், என்னென்ன கோவில்கள் வரும் என எதுவமே தெரியாது….
மலை சுத்தணும், தம்பி குழந்தைக்கு முடியல, மருத்துவமனையில் இருக்கு, தம்பி கதறி அழுகிறார், அண்ணாமலையார் கிட்ட சொல்லணும்,குழந்தைக்கு குணமாகனும் அவ்வளவு தான் தெரியும்..
என்னை போன்ற அதீத உடல் எடை, உடல் ரீதியான உபாதைகளும் இருக்கும் போது நடக்க முடியுமா என்ற எண்ணம் கூட முதன் முறை எழவில்லை காரணம்
பகவானை வேண்டிகிட்டு நடங்கம்மா எல்லாம் அவர் பாத்துப்பார் என்ற எங்க ஐயாவின் வார்த்தைகளே…
அண்ணாமலையானுக்கு அரோகரா சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தால், குழந்தையின் உற்சாகத்தோடு வெகு வேகமாக, மகிழ்ச்சியாக நடை தொடர்ந்தது…
மலை சுற்றல் என்றால் மலை நம்மை பார்க்கிறது என்ற உணர்வுடன் சுற்ற வேண்டும் என்பார்…
உண்மை தான்.
அகண்ட தோளுடைய
அழகிய மலையாக
அழகின் உச்சமாக
என்னவென்றாலும் நான் இருக்கிறேன் என கூறுவது போல் இருந்தது அண்ணாமலையாரை முதலில் பார்த்த போதே நிறைவு.
மலையானை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஏதோ நீண்ட நெடுங்காலமாக தேடிய ஒன்று, இதோ இருக்கிறேன் என்ற உணர்வு.
இந்த மலையைத் தான் குழந்தை பருவத்திலேயே கண்ணில் காட்டினாரா என்ற நெகிழ்ச்சி…
பொதுவாக இடையூறாக தோன்றும் மழையும் பனியும் கூட, அன்று மலையான் தந்த கொடையாகவே தோன்றியது….
பதினைந்து ஆண்டு கால நகர வாழ்வில், செருப்பை கழட்டி நடந்ததான ஞாபகங்கள் குறைவு..
ஆனாலும் அந்த உணர்வு கூட மலை சுற்றும் போது வரவில்லை…
எதற்காக மலை சுற்ற ஆரம்பித்தேன்
சுற்றும் போது யாரையெல்லாம் பார்த்தேன் என்ன நடந்தது என பெரிதாக நினைவில் இல்லை…
அண்ணாமலையாரை நான் பார்ப்பதும், மகிழ்வதும், அண்ணாமலையார் எனை பார்ப்பதுமே போதும் இப்பிறவிக்கு என்ற உணர்வு..
பகவான் அட்சரமணமாலையில் சொன்னது போல
காந்தம் இரும்பு போல கவர்ந்து எனை விடாமல், உலகையே மறக்கச் செய்யும் மந்திர மாமலை அண்ணாமலை.
அண்ணாமலையானை காண்பதும், சுற்றுவதுமே பேரின்பின் என உணர்ந்த நன்னாள் முதல் கிரிவலம்
கிரிவலம் முடியும் வேளையில்
இரவில், உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கண்முன்னே வர அருட்பிரசாதம்.
தம்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு
அக்கா குழந்தை அபாயகட்டத்தை தாண்டி விட்டாளாம் ஓரிரு நாளில் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் சொன்னதாக தகவல்…
வேறென்ன சொல்ல
நன்றியை தவிர
அப்பன் அருணாசலத்திற்கு….
அன்பு கொண்ட பக்தரின் அனைத்தையும் நடத்தி தருபவர்
உலக நாயகர்
அண்ணாமலையார் 🙏🏼
என்ன வேண்டுமோ
என்ன தேவையோ
எது என் தகுதியோ
தருவதற்கு மலையான் இருக்க
நன்றி சொல்வதற்காக மட்டுமே மகிழ்வுடன் அண்ணாமலையாரை அவர் சித்தப்படி, அவர் அருளும் போதெல்லாம் மலை சுற்ற ஆசையுடன் தொடர்கிறது கிரிவலம்…
ஒவ்வொரு கிரி வலமும் ஆத்ம அனுபவமே
அண்ணாமலையானுக்கு அரோகரா
Dr. SL.பாலசந்தியா குமரன்
சென்னை