உயிர் வழி – குரு தேடல் தொடக்கம்

திருவண்ணாமலையில் பிறந்த நான், என்னுடைய சிறு வயது முதலே இறப்பு மற்றும் காமம் தொடர்பான எண்ணங்கள் என்னை எல்லா திசைகள் நோக்கி ஓட வைத்தது. ஆனால் என்னுள் நீக்கமற நிறைந்து இருந்தது பயம்,பயம் மட்டுமே.

தெனாலி என்ற தமிழ் திரைப்படத்தில் திரு.கமல்ஹாசன் அவர்களின் கதாபாத்திரம் போன்று என் வாழ்வில் முக்கிய அங்கமாக பயம் பங்காற்றியது.

ஆனால், குரு என்ற வார்த்தை என்னை ஏதோ செய்தது. சிறு வயது முதல் ஆன்மிக பெரியவர்கள் பற்றிய புத்தகங்கள் படிப்பேன், அதிலும் மரணம் பற்றி யோசித்தாலே எனக்குள் ஏதோ இனம் புரியாத நடுக்கம், பயம், இன்னொன்று இறந்த பிறகு எங்கு போவோம், அந்த இடம் நிரந்தரமானதா ? என்று யோசித்தால் வியர்த்து விடும். மிகவும் ஆழமான அனுபவமாக இருக்கும்.

இப்படி தான் என்னுடைய எளிமையான தேடுதல் ஆரம்பமானது.

என்னுடைய சிறு வயது முதல் பாடப்புத்தகதம் என்னை ஈர்ப்பதை காட்டிலும் ஆன்மிக பெரியவர்கள் பற்றிய புத்தகம் என்னை பெரிதும் ஈர்த்தது.

சிறு வயதில் ரமணர் அவர்கள் மதுரையில் இருந்து திருவண்ணாமலை வருவதற்கு முன் அவர்களுடைய வீட்டு மாடியில் அவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை எங்களுடைய வீட்டில் எங்கு அமர்ந்து அதை படித்தேன் என்பது இன்னும் என்னுடைய மனதில் பசுமையாக இருக்கிறது.

அதற்கு பின்பு, எங்களுடைய வீட்டில் பூஜை அறையில் சாமி படம் வைக்கும் இடத்தில், சாமி படம் வைக்க தின நாளிதழ்கள் மடித்து பயன்படுத்துவோம் . அதில் குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ பாடலை 27 முறை படித்தால் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.சிறிது காலம் தினம் மனதினுள் கூறி வந்தேன்.அந்த குரு என்ற வார்த்தைக்கான ஏக்கம் என்னுள் ஆழமாக இருக்கிறது என்பது என்னுடைய பின் நாட்களில் எனக்கு தெரிய வந்தது.

இயல்பாகவே என் உள்ளம் குரு பக்திக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது.
திருவண்ணாமலை மலை சுற்றி 15 காத தூரம் (15km radius)குரு என்ற தன்மை பரந்து விரிந்து இருப்பதாக இரமணர் சுவாமி புத்தகத்தில் படித்தேன்.

இந்த உயிரின் பயணத்தில் கரைய, இந்த தொடரின் கட்டுரை வழிகாட்டியாக அமைந்திட குருவருள் வேண்டி பணிகிறேன்.

மலை என்பது வெறும் கல்லோ அல்லது மண்ணோ அல்ல, மலைக்கு என்று ஆன்மா(Soul) உள்ளது.

அந்த ஆன்மாவோடு நமக்கு ஏற்படக்கூடிய உறவு தான் மலையின் ஈர்ப்பு.

எப்படி நாம் சில மனிதர்களிடத்தில் ஆத்மார்த்தமாக உணர்கிறோமோ, அதை போலவே சில மலைகளிடம் மட்டும் , அந்த பரிமாற்றம் நம்முள் நடக்கிறது.

ஒரு வேளை இதை பார்த்து தான் ஆதியில், மலையையும் இயற்கையின் அம்சமாக பார்த்து வணங்கினார்களோ…!

 

அ. ராமமூர்த்தி

திருவண்ணாமலை

Ramamoorthy A

1 Comment

  • உயிர்வழி குரு தேடல் என்ற தலைப்பில் உள்ள
    திரு.ராமமூர்த்தி அவர்களின் உள்ளார்ந்த பதிவு மனதை நெகிழ வைத்தது…
    அருணாச்சல சிவ 🙏
    Hearty congratulations sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.

Top
×